ஸ்ரீ செங்கழுநீர் பிள்ளையார் கோயில் சிதம்பரம்



        ஸ்ரீ செங்கழுநீர் பிள்ளையார் கோயில்

கடலூர் மாவட்டம், சிதம்பரம் நகராட்சியில் சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு தென்கிழக்கில் 3ஆம் வீதியில் செங்கழுநீர் பிள்ளையார் கோயில் தெருவில் (செ.பி. கோயில் தெரு) M- 116 ( Major District Road )யினை ஒட்டி அருள்மிகு ஸ்ரீ செங்கழுநீர் பிள்ளையார் கோயில் அமைந்துள்ளது.

கோயில் அமைந்துள்ள இடத்திலிருந்து தெற்கே செங்கழுநீர் வாய்க்காளானது ஓடிக்கொண்டிருக்கிறது. இது ஆயிக்குளம் நிறைந்து வெளிவரும் நீரானது கிழக்கில் ஓடி கான்சாகிப்பு ஓடையில் இணைந்து வங்கக்கடலில் கலக்கிறது. இந்த ஓடையினை ஒட்டி அமைந்திருந்த காரணத்தினாலயே இக்கோயில் செங்கழுநீர் பிள்ளையார் கோயில் என அழைக்கப்படுகின்றது.

கட்டடக்கலை:
         
இதன் கட்டடக்கலையானது கருவறை, அர்த்தமண்டபம், முன்மண்டபம் என உள்ளது. முன்மண்டபமானது முழுவதும் பிற்கலத்தில் எடுக்கப்பட்டுள்ளது. அதிட்டானம், பாதம் வரையில் கல் வேலைப்பாடுகள் தெரிகின்றது. ஏனையப்பகுதிகளான பிரஸ்தரம், கிரீவம், சிகரம், ஸ்தூபி தற்போது செங்கல் கட்டுமானங்களாகத் தெரிகின்றது. உடைந்த கொடுங்கைப்பகுதிகள் அங்கேயே கிடக்கின்றது. இவைகளை வைத்து பார்க்கின்றபோது கல்காரமட்டம் வரை கருங்கல் கட்டுமானமாகவும் கிரீவம் சிகரம் செங்கல் கட்டுமானமாக இருந்துள்ளதும், கருவறை, அர்தமண்டபம் பிற்கலத்தில் கட்டப்பட்டதும் தெரியவருகின்றது.

சிற்பக்கலை:
          மூலவராக கணபதி சிற்பமும், அர்த்தமண்டபத்தில் வாயில்படி இருபுறமும், இடதுபுறம் முருகன், வலதுபுறம் சூரியன் சிற்பமும், அர்த்தமண்டபம்  தென்புறச்சுவற்றில் லிங்கோத்பவ மூர்த்தி, மூசிக வாகனம், ரிஷப வாகனம், கெஜலட்சுமி, முன்மண்டபத்தில் அரிதான சூரியன் சிற்பமும் உள்ளது.

கணபதி:
மூலவரான சுகாசனத்தில் பத்ரபீட்த்தில் அமர்ந்த நிலையில் இடம்புரி விநாயகராக உள்ளார். வலது தன்கரத்தில் ஒடிந்த தந்த தன்கொம்புடன் வலது மேற்கரம் இது தன்கரம் மற்றும் மேற்கரம் உடைந்தும், துதிக்கை மற்றும்  காதுகளின்மேல் மடல் உடைந்தும் 47செ.மீ உயரம், 39செ.மீ அகலம், 20செ.மீ கணம் கொண்டதாக உள்ளது.



முருகன்:
          கருவறை நிலைக்காலுக்கு இடதுபுறம் சுவற்றில் பதிந்துள்ளது. நின்றநிலையில் தலையில் கரண்டமகுடமும் இருகாதுகளில் பத்ர குண்டலம் தரித்து நான்கு கைகளுடம் வலது மேற்கரத்தில் சக்தி ஆயுதமும், இடது மேற்கரத்தில் வஜ்ராயிரத்தை தாங்கி, வலது தன்கரம் உடைந்தும் இடது தன்கரத்தை இடுப்பில் வைத்தவாறு மயில் வாகனத்தில் உள்ளது.இச்சிற்பமானது 68 செ.மீ உயரமும், 28 செ.மீ அகலமும் கொண்ட்தாக உள்ளது.

சூரியன்:
          கருவறை நிலைக்காலுக்கு வலதுபுறத்தில் சுவற்றில் பதிந்துள்ளது. நின்றநிலையில் தலையில் கரண்டமகுடம் இருகாதுகளில் பத்ரகுண்டலம் தரித்து இரண்டு கைகளுடம் வலது இடது தன்கரங்களில்  தாமரை மலர்பிடித்து உள்ளது. இச்சிற்பமானது 65 செ.மீ உயரமும்,25 செ.மீ அகலமும் கொண்டதாக உள்ளது.

லிங்கோத்பவ:
          அர்த்தமண்டப வடபுறச்சுவற்றில் பதிந்துள்ளது. இலிங்கத்தின் நடுவில் சந்திரசேகரமூர்த்தியானவர் கனுக்காலுக்கு கீழ் மறைக்கப்பட்டநிலையில் விஷ்ணு பன்றி உருவில் இடதுபுறம் கீழ்நோக்கிச் செல்வதாகவும்,மேற்பகுதியில் சிகாமணியுடன் சிறிது சடைமுடி மறைக்கப்பட்டு வலதுபக்கம் நான்முகன் அன்னஉருவில் மேல்நோக்கிச் செல்வதாக உள்ளது. இச்சிற்பமானது 122 செ.மீ உயரமும், 41 செ.மீ அகலமும், 13 செ.மீ கணம் கொண்டதாக உள்ளது.

அறிய சூரியசிற்பம்:
          கரண்ட  மகுடத்துடன் இரண்டு கைகளை உடையது. தற்போது இவ்விரண்டு கைகளும் உடைந்துள்ளது. உடைந்த பகுதியினை பொருத்தும் வகையிலான துளையிடப்பட்டு கைகள் இல்லாத நிலையில் காட்சியளிக்கிறது. தலையில் பின்புறம் பிரபா மண்டலமானது சூரியன் உருவில் காட்டப்பட்டுள்ளது. அதனை ஒட்டி அடுத்து நீல்வட்ட வடிவிலான தாமரை இதழ் ஒன்றன்பின் ஒன்றாக இரண்டு அடுக்குகளைக் கொண்டுள்ளது. முதல் அடுக்கில் 27 நட்சத்திரங்களும் இரண்டாவது அடுக்கில் 12 இராசிகளுமாக இடம்பெறுகின்றன. வலதுபுறம் தொடங்கி இடதுபுறம்வரை விருச்சகம் முதல் கடக இராசிவரை தெரிந்த வகையிலும் ஏனையவை பாதத்திற்கு பின்புறம் மறைத்தும் காணப்படுகின்றது. இச்சிற்பம் 125 செ.மீ உயரம், 78 செ.மீ அகலம், 34 செ.மீ கனம் கொண்டதாக உள்ளது. இடது வலது புறத்தில் சூரியனின் தேவியான உஷாபிரத்யுஷா சிற்பங்கள் சூரியசிற்பத்தினை ஒட்டி 57 செ.மீ உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. சூரிய சிற்பமானது குதிரை பூட்டியதேரில் அருணன் தேர்ஓட்டும் வகையில் நின்றநிலையில்  சூரியசிற்பம் உள்ளது. அருணன் மார்பளவு வரை காட்டப்பட்டுள்ள குதிரைகளானது வலதில் 3ம் இடதில் 4ம் உள்ளன. மேலும் சுமார் 40 செ.மீ உயரம் கொண்ட ரிஷபவாகனம், மூசிகவாகனம், பிற்காலத்திய நாகசிற்பம் மற்றும் கெஜலட்சுமி சிற்பமானது அர்த்தமண்டபத்தினுள் உள்ளன.

கல்வெட்டுச்செய்தி:
          சேலம் மாவட்டம், ஓமலூர் வட்டம், தாரமங்கலம் இளமீச்சுரர் கோயில் மண்டபத்தில் தெற்குச்சுவற்றில் உள்ள கி.பி 1541 ஆம் ஆண்டு விஜயநகரர் கல்வெட்டொன்றில் ( SI VOL. Vll, 1900 7, 8-  AR NO.21 ) தாரமங்கலத்து வணங்காமுடி முதலியார், நல்லுடைஅப்பர் கொட்டை முதலியார், இம்மடிகட்டி முதலியார் ஆகியோர் சிதம்பரத்தில் உள்ள நடராஜர் திருக்கோயிலுள் தெற்கு மூன்றாம் வீதியில் உள்ள செங்கழுநீர்ப் பிள்ளையார் சன்னதிக்கு தெற்கில் வணங்காமுடி எனும் மடம் கட்டி அதில் மாகேஸ்வர பூஜை நடத்த நிலம் கொடுத்த செய்தியில் 16 நூற்றாண்டு வாக்கில் செங்கழுநீர்ப் பிள்ளையார் கோயிலானது எல்லையாக சுட்டப்பட்டுள்ளது தெரிகிறது. அப்போது செங்கழுநீர் வாய்க்காலுக்கு அருகில்  சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு தெற்கு மூன்றாம் வீதியில் இருந்த இந்த கோயிலை செங்கழுநீர்ப் பிள்ளையார் கோயில். இது தற்போது M- 116(Major District Road)டை ஒட்டிவாரே அதிட்டானத்திற்கு மேல் பாதத்தில் கல் சுவருக்குமேல் சிமெண்ட் பூசப்பட்டு தற்காலக்கோயிலைப்போல் காட்சியளிக்கின்றது.
          இங்குள்ள சிற்ப்பங்கள் அதன் அமைதியை பார்க்கின்றபோது சுமார் 12,13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த்தாகவும் இதன் கட்டடக்கலையானது 16ஆம் நூர்றாண்டைச் சேர்ந்ததாகவும் இங்குள்ள அறிய சூரியசிற்பத்தை சூரியன் வழிப்பட்ட அர்கேச்வரமாக இருந்திருக்கலாம்.
          கல்வெட்டு சான்றுகளின் அடிப்படையில் 16ஆம் நூற்றாண்டிற்கு முன்பாக இருந்துள்ள இக்கோயில் 12, 13ஆம் நூற்றாண்டைச்சேர்ந்த சூரியசிற்பம் மற்றும் ஏனைய சிற்பங்களைக் தன்னகத்தே கொண்டுள்ள இக்கோயிலை ஒரு தொன்மையான கோயிலாக கருதலாம்.

Comments

Popular posts from this blog

தஞ்சாவூர் மாவட்டத்தில் மேற்கொண்ட அகழாய்வு

கல்வெட்டு ஆராய்ச்சிக்கு படிப்பு

சுண்ணாம்புக் காரை அரைக்கும் கல் சக்கரம்