சுண்ணாம்புக் காரை அரைக்கும் கல் சக்கரம்
சுண்ணாம்புக் காரை அரைக்கும் கல் சக்கரம்
தர்பார்மண்டபத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள சுண்ணாம்புக்காரை அரைக்கும் கருங்கல் சக்கரம் |
இயற்கையில் கிடைத்த சுக்கான் பாறைகள், சுக்கான் கற்களை சுட்டு அதனை சுண்ணாம்புக் காரைகளாக (lime mortar)
தயாரிக்க கருங்கல் செக்குகள் பயன்படுத்தப்பட்டன. தமிழ்நாட்டில் கருங்கல் கட்டடங்களுக்கு முன்னா் செங்கல்லால் கட்டப்பட்ட கட்டடங்கள் இருந்துள்ளன. ஏழாம் நூற்றாண்டு கருங்கல் கட்டடங்கள் அதற்கு முன் இருந்த செங்கல் கட்டடங்களின் மாதிரிகள் தான் என்பதில் ஐயமில்லை. கருங்கல் சுவருக்கு அதன் மேல் சுண்ணாம்புக் காரையால் பூசவேண்டிய தேவை இல்லை. ஆனால் செங்கல் சுவர்களுக்கு சுண்ணாம்புக் காரையால் பூசுவது இன்றியமையாதது.
சுண்ணாம்புடன் மணல்கலந்து அதனைக் கருங்கல் சக்கரத்தில் அரைப்பர்.
50 ஆண்டுகளுக்கு முன்புவரை கூட நடைமுறையில் இருந்துவந்த இந்த முறை சிமெண்டின் (cement) வருகையால் தற்போது வழக்கொழிந்துவிட்டது. அரைத்த சுண்ணாம்புக்காரை சிலநாட்கள் புளிக்கவைத்து பின்னரே பயன்படுத்தப்படும். காளை பூட்டியும் மனிதர்களைக் கொண்டும் வட்டமாகச்சுற்றி சுண்ணாம்புக்காரை அரைக்கப்படும். இவ்வாறு அரைக்கும் கருங்கல் சக்கரத்தின் சுற்றுகளின் எண்ணிக்கைக்கேற்ப அரைத்தீர்வை,
முக்கால்தீர்வை, முழுத்தீர்வை என மூன்று வகைகளாகப் பிரிக்கப்படும். முழுத்தீர்வை காரையில் மணல் முழுமையாக அரைக்கப்பட்டிருக்கும். இதில் சுண்ணாம்பு
பசைத்தன்மையும், பிடிப்புத்தன்மையும் அதிகம் கொண்டிருக்கும். அதனுடன் கடுக்காய்நீர், பதனீர்,
அல்லது சர்க்கரை நீர் மற்றும் நெல்லிக்காய், தான்றிக்காய், முட்டையின் வெள்ளைக்கரு கலந்து காரை தயாரிக்கப்பட்டால் அதன் பிடிப்புத்தன்மை அதிகமாகும்.
இதற்கு வச்சிரக்காரை என்றும் பெயர். இவ்வாறு தேவைக்கேற்ப சிறிய அம்மிக்கல், பெரிய அரைக்கும் கருங்கல் சக்கரங்களால் தான் சுண்ணாம்புக்காரைகள் தயாரிக்கப்பட்டுள்ளன.
சுண்ணாம்புக்காரை தயாரிக்கும் ஓவியம்- ராஜஸ்தான் துந்லோடு |
கிடைத்த இடம் ராணி வாய்க்கால் சந்து தஞ்சாவூர் அரண்மனை செயல்முறை மாதிரி வடிவம் |
Comments
Post a Comment