ஒரத்தநாடு முத்தம்மாள் சத்திரம்


ஒரத்தநாடு முத்தம்மாள் சத்திரம்


ஒரத்தநாடு தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு வட்டத்தில் உள்ளது. இங்கு ஆய்வுசெய்யப்பட்ட முத்தம்மாள் சத்திரம் 10° 37’ 40.2” வடக்கு அட்சரேகையிலும், 79° 15 07.5 கிழக்கு தீர்க்கரேகையிலும் அமைந்துள்ளது. இவ்விடம் தஞ்சாவூரிலிருந்து உளூர் வழியாக பட்டுக்கோட்டை செல்லும் சாலையில் 35 கி.மீ தொலைவில் உள்ளது. காவிரியின் தென்கரையில் உள்ள இவ்வூர் வரலாற்றுச்சிறப்பு மிக்க ஊராக மராட்டியர் ஆட்சி காலத்தில் தலைத்தோங்கி இருந்தது.

ஒரத்தநாடு நகர அமைப்பானது 18, 19 ஆம் நூற்றாண்டில் திட்டமிட்டு கட்டப்பட்டது இதில் இன்றும் இந் நகரத் தெருக்கள் ஒன்றோடு ஒன்று வெட்டிச்செல்வதைக் காணமுடிகிறது. இங்கு காசி விசாலாட்சி, உடனுறை காசிவிஸ்வநாதர் ஆலயம், முத்தம்மாள் சத்திரம், அன்னச்சத்திரம், சவுக்கண்டி, வீரஆஞ்சநேயர் கோயில் மற்றும் தேர் முட்டிகள் என வரலாற்று எச்சங்கள் உள்ளன. 

தஞ்சையை ஆட்சி செய்த மராட்டிய அரசர்கள் 1743 முதல் 1837 வரை பெரிய, சிறிய சத்திரங்களை தஞ்சாவூர் முதல் தனுஷ்கோடி வரை அமைத்தனர். இவற்றில் தஞ்சாவூர்- காஞ்சி வீடு சத்திரம், சிரேயஸ் சத்திரம், சூரக்கோட்டை- சைதாம்பாள்புரம் சத்திரம், இராசகுமரபாயி சத்திரம். பட்டுக்கோட்டை- காசங்குளச் சத்திரம்.  மணமேல்குடி- திரௌபதாம்பாள்புரம் சத்திரம். மீமிசல்- இராசகுமாரம்பாள் சத்திரம். இராமேஸ்வரம்- இராமேஸ்வரம் சத்திரம். தனுஷ்கோடி- சேதுக்கரை சத்திரம். ஆகியன நெடுகிலும் இருந்த பெரிய 20 சத்திரங்களில் முக்கியமானதாக உள்ளன.  முத்தம்மாள் சத்திரம் ஒரத்தநாடு எனும் இடத்தில் திட்டமிட்ட தெருக்களுடன்  கட்டப்பட்டது காசி ராமேஸ்வரம் யாத்திரை வழியில் ராமேஸ்வரம் செல்லும் யாத்திரீகர்களுக்கும், வழிப்போக்கர்களுக்கும் தேவையான உணவு, உறைவிடத்துடன் கூடிய வகையில் இந்ச் சத்திரம் கட்டப்பட்டுள்ளது.

முத்தம்மாள் சத்திரம்
 
இரண்டாம் சரபோஜியால் முத்தம்மாள் நினைவாக இந்த சத்திரம் 1800ல் கட்டப்பட்டது என இங்குள்ள மராட்டிய கல்வெட்டு குறிப்பிடுகிறது.  இவர் 10 வயது சிறுவனாக இருந்தபோது அவரது தந்தை துளாசா மகாராசா அவரது அண்ணன் மகன் அமர்சிங்கிடமிருந்து இரண்டாம் சரபோஜியை பாதுகாக்க வேண்டி தந்தை துளாசா மகாராசாவின் இனிய நண்பரான சுவார்ட்ஸ் பாதிரியார் அவர்களிடம் ஒப்படைத்தார். அவருக்கு ஒரத்தநாடு அருகே உள்ள கண்ணந்தங்குடியில் இயங்கி வந்த வித்தியா பாடசாலையில் மறைமுகமாக கல்வி போதிக்கப்பட்டது. பின்னர் உயர்கல்வி தொடர சென்னை அனுப்பப்பட்டார்.

நாடு திரும்பி ஆட்சிப்பொறுப்பேற்றபிறகு காசியிலிருந்து இராமேஸ்வரம் வழிபாட்டிற்கு செல்பவர்களுக்கும், வழிப்போக்கர்களுக்கும் தங்குவதற்காக ஒரு சத்திரம் கட்ட இரண்டாம் சரபோஜி திட்டமிட்டார். தாம் இளவயதில் கல்வி பயின்ற இடத்தினை நினைவு கூறும் விதமாக சத்திரத்தினை ஒரத்தநாட்டில் கட்டப்பட்டதாக தெரிகிறது. மேலும் அவர் இங்கிருந்தபோது முத்தம்மாள் எனும் பெண்ணிடம் காதல் வயப்பட்டதின் காரணமாக முத்தம்மாள் சத்திரம் எனும் பெயரிடப்பட்டதாகவும் தெரிகிறது.

அழகிய தோரண அமைப்புடைய குதிரை பூட்டிய தேர்ச் சக்கர வாயில் பகுதியும், தூண்கள் தாங்கி நிற்கும் பெரிய முற்றங்களும்,   மேல்தளத்தில் அழகிய வேலைப்பாட்டுடன் மரத்தால் அமைக்கப்பட்ட தூண்களும், நீர் நிறைந்த கிணறும் பழமையோடு உள்ளது. ஒருகாலத்தில் சத்திரமாகவும் கல்விச்சாலையாகவும் இருந்து சத்திரம் தற்போது நிர்வாகக் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. 


கட்டடக்கலை

        முத்தம்மாள் சத்திரத்திரம் அழகிய தோரண அமைப்புடைய “ப“ வடிவ முகப்பு, நீழ்சதுர மற்றும் சதுர முற்றத்துடன் கூடிய தங்குமிடம், முற்றத்துடன் கூடிய சமையலறை என மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. மேலும் முகப்பில் கணபதி, சிவன், முருகனுக்கான சிறிய மாடக்கோயில், மரத்தூண்கள் தாங்கும் மேல்தளம், சமையலறைக்கு தேவையான கிணறு, அரிய சிவலிங்கம் என பல்வேறு வேலைப்பாடு கொண்ட கட்டடமாகத் திகழ்கின்றது.

          சத்திரம் முழுவதும் கருங்கல் மற்றும் செங்கற்கள் கொண்டு கட்டப்பட்டுள்ளது. கருங்கல் கட்டுகள் சார்ஜா பகுதியின் நாக பந்த அமைப்பு வரை 87 செ. மீ உயரம் வரையில் கட்டப்பட்டுள்ளது. இந்த உயரத்திலேயே தூண்களை ஒட்டிய கருங்கல் சிற்பங்கள் பல வடிவமைக்கப்பட்டுள்ளன. இதற்குமேல் உள்ள நுணுக்கமான பகுதிகள், வேலைப்பாடுடைய பகுதிகள் யாவும் 2.5 செ.மீ கணத்தில் செங்கற்கள் கொண்டு கட்டப்பட்டுள்ளது. இவையாவும் செங்கல் கணத்தில் அந்தந்த சிற்பங்கள் மற்றும் வேலைப்பாடுகளுக்கு ஏற்ப களிமண்ணில் பச்சையாக  செய்து பிறகு சுடப்பட்டு சுண்ணாம்புக்காறை கொண்டு ஒன்றோடு ஒன்று ஒட்டப்பட்டுள்ளது. கொடுங்கை மற்றும் சார்ஜாவில் உள்ள வாழை மொட்டு, பலா. சிலைகளும் இதேபோல் செங்கல் அமைப்பில் பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ளது. 


சர்ஜா
        பா“ வடிவ அமைப்பில் இருபுறமும் தேர்போன்ற அமைப்பும் மேல்தளத்தில் அமர்ந்து ஓய்வெடுக்கும் வகையில் ஊஞ்சல் அமைப்பும் இருந்துள்ளது. 87 செ.மீ உயரம் வரை கருங்கல்லாலும் மேற்பகுதி செங்கற்களாலும் கட்டப்பட்டுள்ளது. 

இரு சார்ஜாவுக்கும் இடைப்பட்ட “பா“ வடிவ உள், வெளிப்பகுதில் ஒவ்வொரு தூணுக்கும் ஒரு சிற்பங்கள் என 24 சிற்பங்கள் உள்ளன. அவை வரிசையாக ஒன்றுக்கொன்று எதிரே ஒரேவடிவிலான சிற்பங்களாக அமைந்துள்ளது. இதன் முகப்பில் இருபங்கங்களிலும் தேர்போன்ற அமைப்பாக உள்ளது. இத்தேர் அமைப்பானது கருங்கல் சக்கரம் பொருத்திய தேரை குதிரை பூட்டி இழுத்துச்செல்லும் வகையில் கருங்கல் வேலைப்பாட்டுடன் அமைக்கப்பட்டுள்ளது. 


முற்றம்

        சார்ஜா வழியாக இடதுபுறமாகச் சென்றால் செவ்வக வடிவ முற்றமும் அதன் உள்ஓரங்களில் சரிவான ஓடுகள் வேயப்பட்ட தாழ்வாரம் உள்ளது. அதனை அடுத்து வடக்கே செவ்வகத்தை இரண்டாகத்தடுத்து தூண் படிக்கட்டு மற்றும் யானை சிற்பங்களுடன் கூடிய சதுர முற்றமும் உள்ளது. இம்முற்றத்தின் உட்பகுதியில் பக்கத்திற்கு நான்கு வட்டத்தூண்களும், வெளிப்பகுதியில் பக்கத்திற்கு ஆறு தூண்களும் செங்கல்கொண்டு கட்டப்பட்டு சுண்ணாம்புக் காறை கொண்டு வளவளப்பாக தேய்க்கப்பட்டு நேர்த்தியாக கட்டப்பட்டுள்ளது. முற்றத்திதை மரத்தால் தாங்குகின்ற வகையில் மேல்தளம் ஒன்று உள்ளது. அழகிய மர வேலைப்பாட்டுடன் துாண்களும் அதன் மேல் ஒடு கொண்டு கூரையும் வேயப்பட்டுள்ளது.
          சார்ஜா வழியாக வலதுபுறமாகச் சென்றால் சதுர வடிவ முற்றமும் கிணறு ஒன்றும் உள்ளது. மரத்ததூண்கள் கொண்டு முழுமைக்கும் கட்டப்பட்டு மேற்கூறை ஒடால் வேயப்பட்டுள்ளது. இப்பகுதி சமையல் கூடமாகவும் இடப்புறப்பகுதி கலைநயத்துடன் அமைந்திருப்பதைப்பார்க்கும் போது தங்குமிடமாகவும், பாடசாலையாகவும் இருந்துள்ளது தெரியவருகிறது. அம்முற்றத்திற்கு சார்ஜா வழியாகவும் தனியாக முகப்பு வழியாகவும் வலது, இடது புறமாகவும் செல்ல முடியும் வகையில் கட்டப்பட்டுள்ளது. இந்த முகப்பானது அழகிய தோரண கதவும் 321 செ.மீ உயரம் 226 செ.மீ அகலம் கொண்ட நிலைக்கல்லும் அதன் மேல்பகுதியில் கஜலெட்சுமி சுதை சிற்பமும் வடிவமைக்கப்பட்டுள்ளது.


தூண்கள்

          தரைத்தளத்தின் ஒரு பகுதி துாண்கள் செங்கல் மற்றும் சுதையால் அமைக்கப்பட்டுள்ளது. மேல்பகுதி வட்டமாக இரு துாண்களும் வளைவுகள்தாங்கியவாறும் அமைந்துள்து. சமையலறைத் துாண்கள் மரத்தால் அமைந்துள்ளது. மேல்தளத்தில் வடக்கு கூரையை தாங்கியவாறு 16 துாண்கள் 4 வரிசையாகவும், தெற்குக் கூரையை தாங்கியவாறு 16 துாண்கள் 4 வரிசையாக மொத்தம் 128 ஆறுபட்டைத் தூண்களையும்கொண்டுள்ளது. மரத்தாலானதூண்கள் யாவும் அழகிய 269 செ.மீ உயரமுடையதாகவும்  கலைநயத்துடனும் செதுக்கப்பட்டுள்ளது. இதனைக்கொண்டு மேல்தளம் காற்றோட்டத்துடன் தங்கும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது தெரியவருகிறது.


சிற்பங்கள்

         “பா“ வடிவ உட்புறப்பகுதி மற்றும் வெளிப்பகுதிகளில் ஒவ்வொறுரு தூணுக்கும் ஒரு சிற்பங்கள் உள்ளன சார்ஜாவின் உள், வெளி நான்கு துாண்களிலும் கிழக்குப் புறத்தில் நான்கு வீணை ஏந்திய பெண் சிற்பமும் மேற்குப்புறத்தில் நான்கு வீணை ஏந்திய பெண் சிற்பமும் உள்ளது. உட்புறத்தில் மூன்றாவது தூணில் கொடிப் பெண் சிற்பம் கிழக்கில் ஒன்றும் மேற்கில் ஒன்றும் உள்ளது. நான்காவது தூணில் நர்த்தனவிநாயகர் சிற்பம் கிழக்கில் ஒன்றும் மேற்கில் ஒன்றும் உள்ளது. ஐந்தாவது தூணில் வீணை ஏந்திய பெண் சிற்பம் கிழக்கில் ஒன்றும், மேற்கில் ஒன்றும் உள்ளது. ஆறாவது தூணில் இடது கையினை தொடையிலுமும் வலதுகையில் சாமரம் ஏந்திய பெண் சிற்பம் கிழக்கில் ஒன்றும், மேற்கில் ஒன்றும் உள்ளது. ஏழாவது தூணில் வலது கையினை தொடையிலுமும், இடதுகையில் பூச்செண்டு ஏந்திய பெண் சிற்பம் கிழக்கில் ஒன்றும் மேற்கில் ஒன்றும் உள்ளது.

          தெற்கு நோக்கி முதலாவதாக மற்றும் ஆறாவதாக தூணில் வீணை ஏந்திய பெண் சிற்பங்களும், இரண்டாவது மற்றும் ஐந்தாவதாக தூணில் வலது கையில் பூச்செண்டும் இடது கையினை தொடையில் வைத்தவாறு கொடிப்பெண் சிற்பங்களும், மூன்றாவது மற்றும் நான்காவது தூணில் வீணை ஏந்திய பெண் சிற்பங்கள் என 24 சிற்பங்கள் உள்ளன. 


யானைச்சிற்பம்

       
சதுர முற்றங்களான கிழக்கு முற்றத்தின் படிக்கட்டின் இரு மருங்கில் இரண்டு யானைச்சிற்பங்களும், “பா“ வடிவ சார்ஜா பகுதியின் முகப்புப்படிக்கட்டில் இரு யானைச்சிற்பங்களும் கருங்கல்லில் செதுக்கப்பட்டுள்ளது. முன்னங்கால்கலில் கட்டப்பட்ட சங்கலிகள் துதிக்கையில் வைத்துள்ள சங்கலிகள் தத்ரூபமாகக்காட்டப்பட்டுள்ளது. மேலும் முதுகில் போர்த்தப்பட்ட விரிப்புகள் அதன்மேல் அமர்ந்து செல்லும் இருக்கையும் நேர்த்தியாக வடிக்கப்பட்டுள்ளது. இந்த இருக்கை யானைச்சிற்பத்தின் கல்லிலேயே வடிக்கப்பட்டுள்ளது(ஒரேக்கல்லில்) 112 செ.மீ நீளம், 90 செ.மீ உயரம், 42 செ.மீ கனம் கொண்டதாக அச்சிற்பம் அழகிய வேலைப்பாட்டுடன் அமைக்கப்பட்டுள்ளது.


குதிரை சிற்பம்

        குதிரைப்பூட்டிய தேரை வீரன் ஓட்டிச் செல்வதாக கற்ச்சிற்பமானது சார்ஐாவின் முகப்பில் ஒவ்வொரு பக்கத்திற்கும் இரு குதிரைகள் என  நான்குசிற்பங்கள் இடம் பெற்றுள்ளன. இங்குள்ள யானைச் சிற்பங்களுக்கு நிகராக இச்சிற்பங்கள் உள்ளது. குதிரையில் மராட்டியர் காலத்தில் பயன்பாட்டில் இருந்த ஆடை ஆபரணங்களுடன் குதிரைவீரன் சிற்பம் கலைநயமாக உருவாக்கப்பட்டுள்து.

சிவலிங்கம்

        செவ்வக வடிவ முற்றத்திற்கு கிழக்குச்சுவரை ஒட்டி ஒரு அறையில் சிவலிங்கம் ஒன்று உள்ளது. இது 74 செ.மீ நீளம் 64 செ.மீ அகலமுடைய செவ்வக வடிவ கருங்கல் மனைப்பலகையில் ஆவுடையாறுடன் கூடிய  சிவலிங்கமானது உள்ளது. ஆவுடையாரின் மையத்தில் பொருத்தப்பட்டுள்ள லிங்கமானது முட்டைவடிவில் உள்ளது. ஆகமவிதிகளின்படி உள்ள பிரம்மபாகம், விஷ்ணுபாகம், ருத்தபாகம் இன்றி மராட்டியர் காலத்தில் வழிபட்ட மரகதலிங்கமாகத் தெரிகிறது. ஆவுடையார் 32 செ.மீ விட்டமும் லிங்கத்துடன் 25 செ.மீ உயரமும் கொண்டதாக இச்சிவலிங்கமானது உள்ளது.


செங்கல் சிற்பங்கல்(சுதை)

கழிமண்ணால் தேவைக்கேற்ப உருவங்களை செங்கல் கனத்தில் செய்து பிறகு சுடப்பட்டு சுண்ணாம்புக்காறை கொண்டு ஒன்றோடு ஒன்று ஒட்டப்பட்டுள்ளது. இவை மேற்பகுதி முழுமைக்கும் தேவையான உறுப்புகல் கட்டிடக்கலை நுணுக்கங்களை செய்யப் பயன்படுத்தியுள்ளனர். கொடுங்கைக்கு கீழ் உள்ள பகுதியில் சிற்ருறுவங்கள் இவ்வாராக அமைக்கப்பட்டுள்ளன. ராமஅனுமன் உபதேசக்காட்சிகல், துப்பாக்கி ஏந்திய போர்விரர்கள் வரிசையாகச் செல்லும் காட்சிகள், அரசர் அரசவையில் சிம்மாசகத்தில் அமர்ந்துள்ள காட்சிகள், சிவன் பார்வதி, முருகன் வள்ளி தெய்வானை, விநாயகர் என தெய்வ உருவங்களும் இச் செங்கல் சிற்றுருவச் சிற்பங்களாக கலைநயத்டன் வடிவமைக்கப்பட்டுள்ளது.


கல்வெட்டுக்கல்

முத்தம்மாள் சத்திரம் தொடர்பாக பல்வேறு எலுத்து ஆவனங்கல் கிடைத்தபோதிலும் மிக முக்கியமானதாக சத்திரத்தின் உள்லேயே உள்ள நிலைக்கல்வெட்டு, மேல்தல மரப் பொறிப்பு, துண்டுக்கல்வெட்டு முக்கியமானதாகக் கருதப்படுகிறது. 


நிலைக்கல்வெட்டு

          சத்திரத்தின் நுழைவாயிலின் நிலைக்கு மேல் கருங்கல் பளகையில் வெட்டப்பட்ட மூன்று வரிக்கல்வெட்டு மராட்டி மொழியில் நாகரி எழுத்தில் வெட்டப்பட்டுள்ளது. சத்ரபதி சரபோஜி அரசர் தன்னுடைய நாயகி முக்தாபாய் அவர்களின் பெயரில் இராமேஸ்வரம் செல்லும் வழியில் சத்திரம் கட்டப்பட் செய்தியானது வெட்டப்பட்டுள்ளது.


சத்திரக் கல்வெட்டு

          சத்திரத்தில் இயங்கிவந்த மாணவர் விடுதியின் பின்பக்கம் இருந்த அத்துண்டுக் கல்வெட்டு தமிழ்ப்பல்கலைக்கழக அருங்காட்சியத்தில் வைக்கப்பட்டுள்ளது. முத்தம்மாள்புர அன்னச் சத்திரம் தர்மத்துக்கு கொடுத்த கொடை குறித்த கல்வெட்டு இது ஒருபுறம் தமிழிலும் மறுபுறம் மராத்தியிலும் வெட்டப்பட்டுள்ளது.


மரப் பொறிப்பு

          மேல்தலத்தில் மேல்புறம் உள்ள மர உத்திரத்தில் இந்த பொறிப்பு உள்ளது. மேல்தலத்தில் உள்ள மர உத்திரத்தில் இந்தஎழுத்தானது பொறிக்கப்பட்டுள்ளது. இதில் கி.பி 1872- ஆம் ஆண்டு இராமசாமி மஹால் பழுது பார்க்கப்பட்ட செய்தியானது செதுக்கப்பட்டள்ளது. இதை தஞ்சை கலெக்டர் கேட்டல்துறை அவர்களின் உத்தரவின்படி பழுதுபார்க்கப்பட்டதாவும் பழுது பார்த்த ஆசாரியின் பெயர் அப்பாவு என்றும் இடம் பெற்றுள்ளது.

மேற்படி ஒரத்தநாடு கட்டடக்கலை சிற்பங்கலையும் கல்வெட்டுகளையும் ஒப்பிட்டு ஆய்வு செய்ததில் கருங்கல் மற்றும் செங்கல்லால் கட்டப்பட்ட மராட்டியர் காலக்கட்டடக்கலை எனவும், இங்குள்ள சிற்பங்கள் கட்டடக்கலை கல்வெட்டுகளின் அடிப்படையில் சுமார் 18, 19- ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகவும் தெளிவாகத் தெரிகின்றது. சேதம் அடையும் நிலையில் உள்ள பகுதிகளை பழமை மாறாமல் புனரமைத்து சரி செய்தும் இப் புராதான பொக்கிசத்தை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச்செல்லவேண்டும்

Comments

Popular posts from this blog

தஞ்சாவூர் மாவட்டத்தில் மேற்கொண்ட அகழாய்வு

சுண்ணாம்புக் காரை அரைக்கும் கல் சக்கரம்

கல்வெட்டு ஆராய்ச்சிக்கு படிப்பு